சனி, 18 டிசம்பர், 2010

எங்கும் நீக்கமற நிறைந்து…

Bold

தடதடத்த சத்தத்துடன் புழுதியை கிளப்பியவாறு நாங்கள் சென்ற ஷேர் ஆட்டோ அந்தப் பள்ளியின் முன்னால் சென்று நின்றது. ஆடையில் இருந்த தூசியை தட்டிக்கொண்டே ஆட்டோவிலிருந்து இறங்கினோம். அந்த கிராமத்தின் பெயர் பாக்காமோஹ் (Bhaakamoh) என்று என்னுடன் வந்த நண்பர் கூறினார். அக்கிராமத்திற்குச் செல்ல உத்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

நாங்கள் மொத்தம் ஏழு நபர்கள் சென்றிருந்தோம். அந்த பள்ளி வளாகத்தில் இரண்டு பள்ளிகள் இருந்தன. ஒன்று ஆரம்பப் பள்ளி மற்றொன்று நடுநிலைப் பள்ளி. நாங்கள் ஆரம்பப் பள்ளியில் நுழைந்தோம். பள்ளி வளாகத்தினுள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் அப்பள்ளியின் தலைமையாசிரியர் எங்குள்ளார் என்று கேட்டோம். அந்த குழந்தைகள் ஒரு அறையைக் கை காட்டினர். நாங்கள் அனைவரும் குழந்தைகள் கை காட்டிய அறையில் நுழைந்தோம்.

அறையில் 40 வயதில் ஒரு பெண்மணி எங்களை வரவேற்று நாற்காலியில் அமரச்சொன்னார். அவர்தான் அப்பள்ளியின் தலைமையாசிரியர் என்பதை அவர் புரிந்து கொண்டேன். என்னுடன் வந்த அனைவருக்கும் நன்றாக இந்தியில் பேசவும் படிக்கவும் தெரியும். ஆனால், நான் சுமாராகத்தான் பேசவும் புரிந்து கொள்ளவும் செய்வேன்.

இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கணக்கெடுப்பான அசர் (ASER - Annual Status of Education Report) பற்றியும், அக்கணக்கெடுப்பின் மாதிரி ஆய்விற்காக இந்தப் பள்ளிக்கு வந்துள்ளதாகவும், பள்ளியிலிருந்து சில தகவல்கள் வேண்டும் என்றும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டோம்.

அவர் இந்த ஆய்விற்கு “பள்ளியிலிருந்து என்னென்ன தகவல்கள் வேண்டும் என்று கேட்டு ஆய்விற்கு ஒத்துழைப்பு தந்தார். தலைமையாசிரியரிடம் கேட்டு வாங்க வேண்டிய தகவல்களை அனைவரும் கேட்டு குறித்துக் கொண்டோம். பிறகு பள்ளியை பார்வையிட வகுப்பறைகளுக்குள் சென்றோம்.

வகுப்பறைகள் எல்லாம் கற்றல் பொருட்கள் எதுவுமின்றி வெறிச்சோடி இருந்தன. வகுப்பில் பள்ளிப் புத்தகங்களைத் தவிர வேறெந்த புத்தகங்களையும் காண முடியவில்லை. சுவற்றினில் மட்டும் சில இடங்களில் மட்டும் உடல் உறுப்புகள், எண்கள் என சொற்பமான ஓவியங்களே கண்ணில் பட்டன. குழந்தைகள் சிலர் வகுப்பறைக்குள் இருந்தனர். சிலர் வகுப்பின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் வகுப்பின் வெளியே இருந்தனர்.

தலைமையாசிரியரிடம் குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்கப் பட்டதா? என வினவினோம். அவர் காலை 10 மணிக்கே உணவு பரிமாறப்பட்டது எனக் கூறினார். ஏன் காலையிலேயே உணவு பரிமாறப்பட்டது எனக் கேட்டேன். அதற்கான காரணத்தை அவர் கூறிய பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. உத்திரபிரதேசம் மற்றும் இன்னும் சில வட இந்திய மாநிலங்களில் காலை 7 மணிக்கு பாட வேளைகள் ஆரம்பித்து நண்பகல் 12 மணிக்கு முடிவடைகின்றன என்பது.

ஏன் அப்படி செய்கிறார்கள் என்று ஒரு நண்பரிடம் விசாரித்தேன். அறுவடை காலங்களில் குழந்தைகளை பெற்றோர்கள் தங்களின் விவசாய நிலங்களுக்கு அழைத்துச் சென்று விவசாய வேலைகளில் ஈடுபடச் செய்கிறார்கள். அதனால் குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது. அதனால்தான் இப்படி ஒரு ஏற்பாடு என்று எனக்கு விளக்கமளித்தார்.

பள்ளியில் உள்ள குழந்தைகளிடம் அன்று உணவு பரிமாறப்பட்டதா? என்று வினவினோம். குழந்தைகள் உணவு பரிமாறப்பட்டதாகக் கூறினார்கள். இருந்தும் ஏதாவது உணவு கண்ணில் படுகிறதா என தேடினோம். ஒரு இடத்தில் கஞ்சி கீழே சிந்தி கிடந்தது.

அடுத்ததாக பள்ளியின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டோம். அடிப்படை வசதிகளும் சற்று குறைவுதான். அந்த ஆரம்பப் பள்ளிக்கு மொத்தம் நான்கு அறைகள் இருந்தன. அதில் மூன்று அறைகளில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வகுப்பறையின் தரைகள் சேதமுற்று அங்கங்கே குழிகளாக காணப்பட்டன. பள்ளியின் வராந்தாக்களில் சில ஆடுகள் நின்றுக்கொண்டிருந்தன.

குழந்தைகள் குடிக்க தண்ணீர் ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், பள்ளி வளாகத்தினுள் ஒரு கைப்பம்பு போடப்பட்டு இருந்தது. அதில் தண்ணீர் வருகிறதா? என அடித்துப் பார்த்தேன். பல பலத்த அடிகளுக்குப் பின் அதிலிருந்து தண்ணீர் கொட்டியது. கொஞ்சம் கையால் அள்ளி குடித்துப் பார்த்தேன். பரவாயில்லை குடிக்கலாம் என்று தோன்றியது.

அடுத்து கழிவறைகளை பார்வையிட சென்றோம். அங்கு இரண்டு கழிவறைகள் இருந்தன. அதில் ஒன்று பழுது அடைந்து குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தன. மற்றொன்று பூட்டப்பட்டு இருந்தது.

உத்திரப்பிரதேச பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிகளுக்கும் பல வித்தியாசங்களைக் காண முடிந்தது. ஆனால் ஒரே ஒரு ஒற்றுமையை இரண்டு மாநில பள்ளிகளில் என்னால் பார்க்க முடிந்தது. அது குழந்தைகளின் தன்னம்பிக்கையை சிதைக்கும் ஆசிரியரின் பேச்சும் செயல்களும்தான். இந்த அனுபவம் கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து பார்த்து வருகிறேன். ஆனால், இது வட இந்திய மாநிலங்களிலும் காணப்பட்டதை எண்ணி வருந்துகின்றேன்.

அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் சில கணித கணக்குகளைச் செய்ய சொல்லி ஆய்வு செய்தோம். பெரும்பான்மையான குழந்தைகளால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. உடனே அங்கிருந்த தலைமையாசிரியர் அந்த குழந்தைகளைக் குறைச் சொல்ல ஆரம்பித்தார்.

யாராவது பள்ளிக்கு பார்வையிட சென்றாலோ அல்லது குழந்தைகளின் கல்வித் திறனை பார்வையிட சென்றாலோ கற்றல் திறனில் குறைவாக உள்ள குழந்தையை நோக்கி ஆசிரியர் சொல்லும் ஒரே வார்த்தைஅது ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லைபள்ளிக்கு சரியாக வரும் குழந்தை என்றால், “அதுக்கு புத்தி கொஞ்சம் குறைவு என்று குழந்தையின் முன்னாடியே அக்குழந்தையின் தன்னபிக்கையை சுக்குநூறாக உடைக்கும் ஆசிரியர்கள் எவ்வளவு வெறுக்கத் தக்கவர்கள். தங்கள் குறையை அந்த குழந்தைகளின் மேல் ஏற்றி வைத்து தப்பிக்கும் இது போன்ற ஆசிரியர்கள் குற்றவாளிகளை விட மோசமானவர்கள்தானே!

இந்த நிலை என்று மாறுமோ என்று நொந்தபடி பள்ளியை விட்டு வெளியே வந்த எங்களை அதே ஷேர் ஆட்டோ ஏற்றிக் கொண்டு மீண்டும் தடதடத்தபடியே புழுதியை கிளப்பிக் கொண்டு பறந்தது.