வெள்ளி, 23 அக்டோபர், 2009

மனுசங்க... - சிறுகதை

கையில் தூக்கோடு வீட்டிற்குள் நுழைந்தான் சடையாண்டி. “இந்தா புள்ள! குழந்தைகளுக்கு டீத் தண்ணிய ஊத்திக் கொடு ஆறிடப்போகுது” என்று அஞ்சைலையை எழுப்பினான். கண்களைத் தேய்த்துக் கொண்டு டீ தூக்கை கையில் வாங்கி கீழே வைத்து விட்டு; வாசலில் இருந்த பானையில் தண்ணீர் அள்ளி முகத்தில் அடித்தாள். தெரித்த நீர்த்துளிகளில் வானவில்கள் தோன்றின. முந்தானையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டு கண்ணாடி கிளாசை எடுத்து டீயை ஊற்றி பொன்னியையும் பாலுவையும் எழுப்பி டீ கிளாசை கைகளில் திணித்தாள்.

டீயை அவர்கள் இருவரும் குடிப்பதைப் பார்த்து பாசத்தில் லயித்து போயிருந்தாள் அஞ்சலை. அவள் தன் வறுமையின் துன்பக் கோடுகளை தன் பிள்ளைகளின் மகிழ்வால் அழித்துக் கொண்டிருப்பவள். சாக்கடையில் இறங்கி ஊரை சுத்தப்படுத்தும் தன் கணவனின் சொற்ப சம்பாதியத்திலும் இரண்டு வீட்டில் பாத்திரம் கழுவும் வருமானத்தில் இரு குழந்தைகளை வளர்த்து வருகிறாள்.

பொன்னி அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். தன் தம்பியை தினமும் தன்னுடன் கூட்டிக் கொண்டு போகும் வழியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் விட்டுச் செல்வாள். பள்ளியில் பொன்னியிடம் சரியாக பேசுவதும் பழகுவதும் இல்லை. பள்ளியில் படிக்கும் ராசாத்தி தன் தோழிகளிடம் பொன்னியின் அப்பா செய்யும் வேலையைப் பத்தி சொல்லி கேலி செய்வாள்.

பொன்னிக்கும் ராசாத்திக்கும் இதனால் நிறைய முறை சண்டையே வந்துள்ளது. இருப்பினும் பொனிக்கு தன் அப்பாவின் வேலை சற்று கவலை தந்தது. ச்சே... மத்தவங்கள மாதிரி ஏன் அப்பா வேலை செய்யக்கூடாது. பாழாய் போன இந்த பீ அள்ளுர வேலையை ஏன்தான் செய்யறாரோ, மத்தவங்கள மாதிரி என்னாலே அப்பா செய்ற வேலய சொல்ல முடியலயே என்று தனக்குள் ஆதங்கப்பட்டுக் கொள்வாள்.

இதைப்பற்றி நிறைய தடவை தன் அப்பாவிடம் கேட்டிருப்பாள். அவரும், “என்னம்மா பண்றது எனக்கு தெரிஞ்ச பழகிப் போன வேலம்மா... இது ஒன்னும் தப்பில்ல, ஊர சுத்தப்படுத்துற வேலையத்தானே நான் செய்றேன். இதிலே என்ன குறைச்சல் இருக்கு” என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவளை சமாதானப் படுத்துவான். வாரம் இருமுறை ராசாத்தியின் வீட்டிற்கு சென்று கக்கூஸ் கழுவி விட்டு வருவான் சடையாண்டி. அன்று ஞாயிற்றுக் கிழமை. இரவு பெய்த அடைமழையால் தெருவெல்லாம் தண்ணீர் நிரம்பியிருந்தது. சாக்கடை கழிவுகள் எல்லாம் தெருவை ஆக்கிரமித்திருந்தன. விடுமுறை ஆனதால் ராசத்தி கொல்லைப் புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அன்று ராசத்தியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் சடையாண்டி. வீட்டின் அருகே செல்லும் போது நாலஞ்சு பேர் கத்திக்கிட்டு ராசாத்தி வீட்டின் பக்கம் ஓடினார்கள். இவனுக்கு ஒன்னும் புரியவில்லை. இருந்தாலும் இவனும் ஓடினான். அங்கு திறந்து கிடந்த மலக்குழியில், விளையாடிக் கொண்டிருந்த ராசாத்தி விழுந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தாள். அங்கே பத்து பேருக்கு மேல் “காப்பாத்துங்க... காப்பாத்துங்க...” என்று பதறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதில் ஒருவர் இறங்கி இருந்தால் கூட அவளை மேலே தூக்கியிருக்க முடியும். ஆனால், மலக்குழியில் இறங்குவதற்கு அஞ்சியும், அருவருப்பை உணர்ந்தும் யாரும் இறங்காமல் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராசாத்தியின் தாய், தந்தையும் கூட

பதறிப்போய் வந்த சடையாண்டி அங்கே வந்து பார்த்ததும் “என்னப்பா.. யாராவது எறங்கி தூக்கலாம்லே” என்று சொல்லிக் கொண்டு சடாரென்று.. என்று இறங்கி மூச்சு விட திராணியற்றுப் போய் கிடந்த ராசாத்தியை தூக்கி மேலே கிடத்தினான். அருகே இருந்த கிணற்றில் தண்ணியை சேந்தி ராசாத்தியின் மேல் ஊற்றி சுத்தம் செய்தான்.

அவள் முகத்தில் தண்ணி தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தான். “என்ன மனுசங்க நீங்க.. குழந்தை செப்டிக் டேங்ல விழுந்திடுச்சி யாராச்சும் போய் உடனே தூக்குவீங்களா.. அத விட்டுட்டு சுத்தி நின்னு வேடிக்கை பாக்கிறீங்களே ஏம்மா நீங்க பெத்தவங்கதானே உங்க புள்ள உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கு நீங்களும் அவங்கள போல கத்திக்கிட்டு நிக்கிறீங்களே இதிலென்னம்மா அசிங்கம். வவுத்துக்குள்ள இருந்தா அசிங்கமில்ல ஆனா அதுவே வெளியே வந்திடிச்சின்னா அசிங்கமா போயிடுதா..? நானும் உங்கள மாதிரி அசிங்கம் பார்த்து நின்னுட்டா உங்க வீடே நாறிப்போயிடும். அசிங்கம்கிறது நம்ம தொழில்லயும் செயல்லயும் இல்லீங்க நம்ம மனௌசுலதாங்க இருக்கு” என்று சொல்லிக் கொண்டு தன் மேலும் நீரை ஊத்தி சுத்தம் செய்துக் கொண்டான். அவனை சுற்றி நின்னவங்க நாற்றம் தாங்காமல் அங்கிருந்து பேசாம கலைய ஆரம்பித்தார்கள்.

ராசாத்தியின் பெற்றோரும் ராசாத்தியும் ஒரு நல்ல மனிதனை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். சடையாண்டி அங்கிருந்து போய்க்ம் கொண்டிருந்தான். மறுநாள் காலை பள்ளியில் கையில் இனிப்போடு பொன்னிக்காக காத்திருந்தாள் ராசாத்தி.

கருத்துகள் இல்லை: