ஞாயிறு, 28 டிசம்பர், 2008

பிரியும் நேரத்தில்...பிரியும் நேரத்தில்...
- நாணற்காடன்.

ஹைக்கூக் கவிஞர்களில் சமீப காலமாய் கவனம் பெற்று வருபவர் கவிஞர் நாணற்காடன். சமீபத்திய இவரின் ஹைக்கூத் தொகுப்பு பிரியும் நேரத்தில். இத்தொகுப்பு இவருக்கு கவிஞர் தாராபாரதி விருதையும், புதுச்சேரி சுந்தரம்பாள் அறக்கட்டளை விருதையும் பெற்றுத்தந்துள்ளது.சாணம் மெழுகிய வீடு

தரை முழுக்க

அம்மாவின் விரல்கள்-என்னும் ஹைக்கூவில், அம்மாவின் பாசம் கைவிரல்களால் வீடு முழுக்க தீட்டப்பட்ட ஓவியமாக காட்சியளிக்கிறது. இக்கவிதை கன்னிக்கோவில் இராஜாவின் குறுஞ்செய்தி இதழில் வெளிவந்து கவனத்தை பெற்றது. அம்மாவின் நினைவுகளை சுமந்தபடி பயணிக்கையில் மீண்டும் ஒரு கவிதையால் அப்பாவின் பாசத்தை வருடுகிறார்.


தொட்டிலில் குழந்தை

தாலாட்டும் அப்பா

கொலுசில்லா வீடுஇக்கவிதையும் குறுஞ்செய்தி இதழில் வெளிவந்து பாராட்டைப் பெற்றது


தேர்வு அறை

படபடக்கும் கேள்வித்தாள்

சன்னலோரம் அணில்

தேர்வறையில் கேள்வித் தாளில் முகம் புதைந்து கிடக்கிற தருணங்களில் கூட சன்னலோரம் விளையாடும் அணிலை இரசிக்கும் குழந்தை மனசு இக்கவிஞருக்கு. கவிஞனின் பார்வை எதையும் அழகியல் தன்மையோடு பார்க்கும் என்பது இதன் மூலம் புலனாகிறது.


அலுவலக அவசரம்

கதவிடுக்கில்

இரைதேடும் பல்லி


- என்ற கவிதையில் வயிற்றுப் பிழைப்பிற்காக அவசரமாய் வயிற்றை நிரப்பிக் கொண்டு அலுவலகம் ஓடுகையில், இரைக்காக கதவிடுக்கில் தவம் கிடக்கும் பல்லிக்காக இரங்கும் கவிஞரின் மனசு,


காலை நேர இழவு வீடு

நழுவும் மனிதர்கள்

எட்டு மணியாகிவிட்டது


-என்ற கவிதையில் இழவு வீட்டில் துக்கத்தை காலை எட்டு மணிக்கு முடித்துக் கொண்டு அலுவலகம் பறக்கும் மனிதர்களைக் கண்டு சாடுகிறது.


குல்லா பூணூல் அங்கி

புதைந்து கிடக்கின்றன

பருத்தி விதைகுள்


-என்னும் கவிதை, அன்பை கற்பிக்க உருவான மதங்கள் மனிதத்தை தொலைத்துக் கொண்டிருக்கையில், அதன் மூலத்தை மீண்டும் துல்லியமாக நினைவுப் படுத்தியிருப்பது கவிஞரின் சமத்துவத்தை புலப்படுத்துகிறது.


வேலைக்குப் போகும் விதைவை

பாதுகாப்பாய்

நெற்றிப் பொட்டு


-என்னும் கவிதை, விதைவைப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது சமூகத்தின் மூடநம்பிக்கை வேர்களை அறுக்கமட்டுமல்ல, அலுவலகங்களில் தனக்கான ஒரு பாதுகாப்பை உருவாக்குகிறது என்பதையும் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.


இன்னும் இத்தொகுப்பில் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டிய, வாசிக்கத் தூண்டிய ஹைக்கூக்கள் விரவிக்கிடக்கின்றன. கவிஞர் நாணற்காடன் இத்தொகுப்பின் அனைத்துப் பக்கங்களிலும் அன்பு, பாசம், காதல், இரங்கல், அக்கறை, கோபம், யதார்த்தம், சமத்துவம் என அனைத்தையும் பரப்பி இத்தொகுப்பை வாசித்து முடித்து பிரியும் நேரத்தில் மனதை கலங்கடிக்கிறார். இவரின் ஹைக்கூப் பயணங்கள் தொடரட்டும்.


குலுக்கிய கைகளில்

நட்பின் வாசம்

பிரியும் நேரம்.வெளியீடு: கவின் நூல் பயணம், வந்தவாசி.


முகவரி:

நாணற்காடன்,

55,விவேகானந்தர் நகர்-5,

இராசிபுரம்(அஞ்சல்),

நாமக்கல் மாவட்டம்- 637 408.

செல்: 9942714307.

கருத்துகள் இல்லை: